Search This Blog

Monday, May 4, 2015

விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்

Windows System Tools
நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.

இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.

1. விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை இயக்கினால், அது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனையிட்டு, அதில் பிழைகள் இருந்தால், எடுத்துக் காட்டும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள மெமரி குறித்துச் சோதனையிட, வேறு ஒரு புரோகிராம் தேவையில்லை. விண்டோஸ் தரும் இந்த டூலையே பயன்படுத்தலாம்.

2. ரிசோர்ஸ் மானிட்டர் (Resource Monitor): கம்ப்யூட்டரின் பல்வேறு பகுதிகளின் செயல் திறனை அறிந்து கொள்ள இந்த டூலைப் பயன்படுத்தலாம். சிபியு, டிஸ்க், நெட்வொர்க் மற்றும் மெமரி கிராபிக்ஸ் என அனைத்து பிரிவுகளின் திறனை அளக்கிறது. ஒவ்வொரு திறனுக்குமான செயல்பாட்டு புள்ளி விபரங்களை எடுத்துத் தருகிறது. எனவே, இதன் மூலம், எந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை அல்லது நெட்வொர்க்கினை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகிறது என அறியலாம். எந்த செயல்பாடு, இன்டர்நெட் இணைப்புடன், அல்லது வேறு இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது என்பதனை அறியலாம். டாஸ்க் மானேஜர் புரோகிராம் தன் செயல்பாட்டில் அதிகமான தகவல்களைத் தருவதனைக் காட்டிலும், இந்த புரோகிராம் தருகிறது. டாஸ்க் மானேஜர் புரோகிராமினை இயக்கி, அதில் உள்ள Performance டேப்பினை கிளிக் செய்து, பின்னர் இதில் கிடைக்கும் Resource Monitor ஐ இயக்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீனில், தேடல் கட்டத்தில் Resource Monitor என்று டைப் செய்தும் இதனைப் பெறலாம்.

3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): பெர்பார்மன்ஸ் மானிட்டர் டூல், பல்வேறு செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தேடித் தரும். குறிப்பிட்ட கால நேரத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாட்டினை இதன் மூலம் அறியலாம். மேலே சொல்லப்பட்ட பெர்பார்மன்ஸ் மானிட்டர் என்பது, மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல் டூல்ஸ் (Microsoft Management Console (MMC) என்ற தொகுப்பின் ஒரு பகுதி தான். பெரும்பாலான இது போன்ற டூல்ஸ்களை, Administrative Tools போல்டரில் பெறலாம். அல்லது, Computer Management என்ற அப்ளிகேஷனைத் திறந்தும் பெறலாம். இவை போன்ற டூல்ஸ்களுடன், கீழ்க்கண்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.

1. Task Scheduler: காலத்தில் செய்யப்பட வேண்டியவை என்று அடையாளம் தரப்பட்ட பணிகளைக் காண்பதற்கும், அவற்றை செட் செய்வதற்கும் இந்த டூல் பயன்படுகிறது. நாம் வரையறை செய்திடும் பணிகளோடும், சிஸ்டம் செட் செய்து அமைத்திடும் பணிகளையும் காலத்தே செயல்படுத்தும்.

2. Event Viewer: சிஸ்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காட்டும். சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும் நிகழ்வுகளிலிருந்து, அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிராஷ் ஆவதிலிருந்து, புளு ஸ்கிரீன் ஆப் டெத் நிகழ்வு வரை அனைத்தையும் பட்டியலிட்டு தரும்.

3. Shared Folders: உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், பங்கிடப்பட்ட போல்டர்களைக் காட்டும் ஒரு இன்டர்பேஸ். எந்த எந்த போல்டர்கள், உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் பங்கிடப்படுகின்றன என்பதனைக் காட்டும் ஒரு டூல்.

4. Device Manager: உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை நாம் தெரிந்து கொள்ளப் பயன்படும் டூல். இதன் மூலம் அவற்றைச் செயலிழக்கவும் செய்திடலாம். புரோகிராம்களின் ட்ரைவர்களை செயல்படும்படி அமைக்கலாம்.

5. Disk Management: டிஸ்க்கினைப் பிரித்துக் கையாளும் பார்ட்டிஷன் மேனேஜர் டூல். டிஸ்க் இடத்தைப் பிரிக்க, வேறு ஒரு தர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை இல்லை. இதனையே பயன்படுத்தலாம்.

5.A. Services: விண்டோஸ் இயக்கத்தில், பின்புலத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளைக் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நமக்கு உதவிடும் டூல். Administrative Tools போல்டரில், மற்ற பயன்பாட்டு புரோகிராம்களும் கிடைக்கின்றன. விண்டோஸ் பயர்வால் போன்ற பாதுகாப்பு தரும் புரோகிராம்கள் உட்பட பல புரோகிராம்கள் உள்ளன.

4. User Accounts: விண்டோஸ் சிஸ்டத்தில், வழக்கமான இன்டர்பேஸ் மூலம் கிடைக்காத, யூசர் அக்கவுண்ட்ஸ் குறித்த விபரங்களை, இந்த மறைத்து வைக்கப்பட்டுள்ள User Accounts டூல் தருகிறது. இதனைத் திறக்க, WinKey+R கீகளை அழுத்தி ரன் டயலாக் கட்டம் பெறவும். netplwiz அல்லது control user passwords2 என டைப் செய்து, என்டர் தட்டவும். இந்த டூல் கிடைக்கும் விண்டோவிலேயே, Local Users and Groups டூலை இயக்கத்திற்குக் கொண்டு வர ஷார்ட் கட் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்டோஸ் நிர்வகித்திட பல டூல்கள் கிடைக்கும்.

5. Disk Cleanup: மற்ற டூல்களைப் போல, இது மறைத்து வைக்கப்பட்ட டூல் அல்ல. ஆனால், விண்டோஸ் பயன்படுத்துவோர் பலரும் இதனை அறிந்திருப்பது இல்லை. உங்கள் கம்ப்யூட்டரில் அழிக்கப்பட வேண்டிய பைல்களை இது கண்டறியும். தற்காலிக பைல்கள், பழைய சிஸ்டம் ரெஸ்டோர் நிலைகள், விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்கள் மேம்படுத்தப்படுகையில், விடப்பட்ட தேவையற்ற பைல்களை இது கண்டறிந்து காட்டும். PC Cleaning Utility புரோகிராம் செய்திடும் அனைத்து பணிகளையும் இது செய்திடும். இது இலவசமாக விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. டிஸ்க்கினை கிளீன் செய்யத் தொடங்கி, நம்மிடம் பணம் பறிக்கும் வேலையினை இது மேற்கொள்ளாது. நம்மில் பலரும் சிகிளீனர் புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். அதே வேலையினை விண்டோஸ் சிஸ்டத்தில் இலவசமாக இணைந்தே வழங்கப் படும் டிஸ்க் கிளீன் அப் புரோகிராம் செய்கிறது. ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் Disk Cleanup என டைப் செய்து இதனைப் பெறலாம்.

6. ரிஜிஸ்ட்ரி எடிட்டர்: நம்மில் பலரும் அறிந்த ஒரு டூல். மைக்ரோசாப்ட் இதனை மறைத்தே வைத்துள்ளது. regedit என டைப் செய்து இதனைப் பெறலாம். இதனைக் கையாள்வதில் கவனம் தேவை. எதற்கும், இதனைத் திறக்கும் முன், இதன் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

7. எம்.எஸ். கான்பிக்: மிக அருமையான ஒரு புரோகிராம் டூல். விண்டோஸ் இயக்கத்தின் போது, என்ன என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்த எந்த புரோகிராம்களை இயக்க வேண்டும், இயங்கி வரும் எந்த புரோகிராம்களை நீக்க வேண்டும் என நாம் முடிவு செய்வதனை இதன் மூலம் நிறைவேற்றலாம். ஸ்டார்ட் மெனுவில் msconfig என டைப் செய்து இதனைப் பெறலாம்.

8. System Information: இதனை இயக்கும் கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். கம்ப்யூட்டர் மாடல் எண் என்ன என்பதிலிருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள டிவிடி ராம் சாதனம் எந்த மாடலைச் சேர்ந்தது என்பது வரை அறிந்து கொள்ளலாம். இப்படியே அனைத்து இயக்கங்கள் குறித்தும் தகவல்களை இதன் மூலம் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட பல பயன்பாட்டு டூல் சாதனங்கள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம், நாம் எப்போதாவது, நம் தேவைகளுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏ.சி.டி. பைபர் நெட் தரும் அதிவேக இணைய இணைப்பு


நொடிக்கு ஒன்று அல்லது இரண்டு மெகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு கிடைப்பதே அரிதான வேகம் என்று நாம் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நொடிக்கு 20, 40 மற்றும் 60 மெகா பிட்ஸ் வேகத்தில், குறைந்த கட்டணத்தில் இணைய இணைப்பு தரும் பணியை, பெங்களூருவைச் சேர்ந்த அட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (Atria Convergence Technologies (ACT))என்னும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயருடன் இயங்கும் இந்த நிறுவனம், முன்பு ஹைதராபாத்தில் இயங்கி வந்த அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு தந்து வந்த பீம் டெலி நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம். 

பீம் டெலி நிறுவனம், 2011 ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500க்கு 20 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தந்து வந்தது. 

இதனை வாங்கி, தற்போது ஏ.சி.டி. பைபர்நெட் என்ற பெயரில் தன்னை விரிவாக்கிக் கொண்ட நிறுவனம், தற்போது ஆந்திர மாநிலம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இணைய இணைப்பு திட்டங்களைத் தருகிறது.

மாதம் ஒன்றுக்கு ரூ.1,999 கட்டணத்தில் அளவில்லா டேட்டா பயன்படுத்தும் வகையில், நொடிக்கு 60 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினைத் தருகிறது. ரூ.1,399க்கு, 40 மெகா பிட்ஸ் வேகமும், ரூ. 1,049க்கு, 20 மெகா பிட்ஸ் வேகத்திலும் இணைப்பினைத் தரும் திட்டங்களை அறிவித்துள்ளது. 

விரைவில் வர்த்தகச் செயல்பாட்டிற்கு 250 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைப்பு தரும் திட்டத்தினையும் மேற்கொள்ள இருக்கிறது. 
ஏ.சி.டி. நிறுவனம், இணைய இணைப்பிற்கு ஆப்டிகல் பைபர் கேபிளைப் பயன்படுத்துகிறது. இணைய இணைப்புடன் கேபிள் டி.வி. இணைப்பினையும் தருகிறது. 
தற்போது ஹைதராபாத் நகரில் 4 லட்சம் சந்தாதாரர்களையும், பெங்களூருவில் 1.5 லட்சம் பேர்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் மூலதனத்தினை, பன்னாட்டளவில் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நகருக்கும் ரூ.100 கோடி மூலதனச் செலவு செய்திட திட்டமிட்டுள்ளது. 

இந்திய அளவில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், தற்போது இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை அதிக அளவில் வசூலித்து வரும் நிலையில், ஏ.சி.டி. நிறுவனம் வரும் நிலையில், போட்டியின் காரணமாக, கட்டணம் அதிக அளவில் குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்



ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்தியாவில், பெருமளவில் அதிகரித்து வருகிறது. 

பல நிறுவனங்கள் போட்டி போட்டு அனைத்து பிரிவினரும் வாங்கும் வகையில் இந்த வகை ஸ்மார்ட் போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். 

மேலும், தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது. இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. 

இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் தொடர்ந்து வருகின்றன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. 

அடிப்படை வசதிகள் மட்டுமே கிடைக்கும் போன்களில், கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

இதனாலேயே இந்த போன் பயன்பாட்டின் பலவகை அம்சங்களின் இயக்கங்கள் குறித்து வாசகர்கள் பல கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து பலர் முழுமையாக அறியாமல் இருப்பது தான். எனவே, ஏற்கனவே வெளியான சில தகவல் குறிப்புகள் இங்கு விரிவாகத் தரப்படுகின்றன.


நிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: 

நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனை எந்த நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது என்ற அடிப்படையில் சில மேம்போக்கான வேறுபாடுகள் இருக்கலாம். 

இவை பெரும்பாலும், தொடக்க திரை தரும் மெனுக்களில் மட்டுமே இருக்கும். மற்ற இயக்க பயன்கள் பொதுவானதாகவே இருக்கும். எச்.டி.சி. மற்றும் சாம்சங் போன்களில் அனைத்துமே ஒரே மாதிரியாகத் தரப்பட்டிருக்கும். ஆனால், இந்த வேறுபாடுகள் குறித்து யாரும் கவலைப்பட்த் தேவை இல்லை.


அழைப்பில் வேறுபாடு: 

உங்களுடைய பழைய மாடல் போனில், அழைப்புகளை ஏற்படுத்தலாம், பெறலாம், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம். படங்களை எடுக்கலாம், பார்க்கலாம். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போனிலும் இவற்றை மிக நன்றாகவும், திறன் கூடியதாகவும் மேற்கொள்ளலாம். 

இருப்பினும் ஒரு வேறுபாடு உள்ளது. ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இயக்கத்தின் அடிப்படை அவற்றின் அப்ளிகேஷன்களே. இவற்றை Apps என அழைக்கின்றனர். நாம் ஆண்ட்ராய்ட் போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும், இந்த ஆப்ஸ் என்ற அப்ளிகேஷன்கள் வழிதான் மேற்கொள்ளப்படுகின்றன. 

உங்கள் போன் திரையின் (Home Screen) கீழாக, போன் ஐகான் உள்ளதா? அதனைத் தொடுங்கள். உடனே அழைப்பு ஏற்படுத்துவதற்கான திரை கிடைக்கும். இதனுள்ளாக, அழைப்புகளை ஏற்படுத்தலாம், வாய்ஸ் மெயில் இயக்கலாம், நீங்கள் ஏற்படுத்திய, பெற்ற அழைப்புகளின் பட்டியலைக் காணலாம். முகவரிகள் பட்டியல் கிடைக்கும். உயர் வகை ஆண்ட்ராய்ட் போன் என்றால், இந்த முகவரிகளை குழுவாகப் பிரித்து அமைக்கலாம். பட்டியலில் உள்ள எண்களைக் கொண்டவர்களின் மின் அஞ்சல் முகவரிகளையும் பதிந்து வைக்கலாம்.


மெசேஜ் அனுப்பும் வசதி: 

உங்கள் போனைப் பொறுத்து இது Messages அல்லது Messaging என அழைக்கப்படும். நவீன போன்களில், Hangouts அப்ளிகேஷனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் கையாளலாம். மெசேஜிங் ஐகான அழுத்திக் கிடைக்கும் திரையில், ஒரு + ஐகான் கிடைக்கும். 

இதனை அழுத்தினால், புதிய மெசேஜ் ஒன்றை அமைக்கலாம். டெக்ஸ்ட் மெசேஜ் ஒன்றை அனுப்ப அதனைப் பெறுபவர் (recipient) குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.

அதிரடி தொழில் நுட்ப வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல்




மொபைல் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குச் சவால் விடும் வகையில் நவீன தொழில் நுட்பங்களில் இயங்கும் அதிரடி வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல் போன் சிஸ்டம் வர இருக்கிறது. 

இதற்கான முன்னோட்டத்தினை, மைக்ரோசாப்ட், அண்மையில் சீனாவில் நடைபெற்ற WinHEC (Windows Hardware Engineering Community) Shenzhen 2015 என்ற கருத்தரங்கில் காட்டியது. 

“Windows 10 Mobile” என்ற தலைப்பில் இந்த புதிய வசதிகள் குறித்து, மைக்ரோசாப்ட் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அவற்றை இங்கு காணலாம்.


4கே வீடியோ பதிவு (4K Video Recording): 

விண்டோஸ் 10 கேமரா அப்ளிகேஷன், 4கே வீடியோ பதிவிற்கான முழு சப்போர்ட்டுடன் கிடைக்கும். வீடியோ பதியப்படுகையிலேயே, ஸூம் செய்வதற்கான வசதி, ப்ளாஷ் இயக்கத்தினைத் தனியே கட்டுப்படுத்தும் வசதி, வீடியோ எச்.டி.ஆர். (High dynamic range) தொழில் நுட்பம் மற்றும் இது சார்ந்த தொழில் நுட்ப வசதிகள் ஆகியன தரப்படுகின்றன.


வை பி டைரக்ட் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் 2: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில் வை பி டைரக்ட் தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்கள், வை பி நெட்வொர்க்கில் இணையாமலேயே, தங்களுக்குள் வை பி இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். வை பி ஹாட் ஸ்பாட் வசதியின் மூலம், பயனாளர்கள் ஒரு இணைப்பினை, பலர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


புளுடூத் அம்சங்கள்: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான ஆடியோ மேம்பாட்டிற்கான அம்சங்கள், அதன் புளுடூத் டூலில் தரப்படுகின்றன. Wideband speech எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம், எச்.டி. வாய்ஸ் தன்மை கிடைக்கும். A2DP மூலம், ஸ்டீரியோ ஆடியோ தன்மை வெளியாகும்.


எச்.சி.இ. சப்போர்ட் இணைந்த என்.எப்.சி.: 

தற்போது அண்மைக் களத் தகவல் தொடர்பு என அழைக்கப்படும் என்.எப்.சி. அனைத்து மொபைல் போன்களிலும் தரப்படுகிறது. விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டம் இதனை இன்னும் எளிமையாகவும் நவீனமாகவும் அமைக்கிறது. 

இதுவரை மொபைல் சேவை வழங்கும் சிம் கார்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியே, என்.எப்.சி. இணைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், எச்.சி.இ, (Host card emulation) எனப்படும் சாப்ட்வேர் கட்டமைப்பில், சாப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தி பலவகை கார்ட்களின் எலக்ட்ரானிக் அடையாளங்கள் அறியப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.


ஸ்மார்ட் டயல்: 

இதுவரை மொபைல் போன்களில் பயன்படுத்தப்படாத ஒரு ஸ்மார்ட் டயல் வசதி, விண்டோஸ் 10ல் அறிமுகமாகிறது. இதில் “Yellow Books” என்று ஒரு வசதி உள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், மற்றவர்களின் தொடர்பு விபரங்களைத் தேடி அறியலாம்.


பேட்டரி பாதுகாப்பு: 

பேட்டரியின் திறன் செலவாவதைப் பயனாளரே கட்டுப் படுத்தும் வகையில், Battery Saver என்னும் டூல் தரப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.


யு.எஸ்.பி. டூயல் ரோல் மற்றும் சி வகை இணைப்பு: 

விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான யு.எஸ்.பி. வழி இணைப்பு சாதனங்களை இணைத்திட சப்போர்ட் தரப்பட்டுள்ளது. கீ போர்ட், மவுஸ் மற்றும் பெரிய அளவிலான ஸ்டோரேஜ் சாதனங்களை இணைக்கலாம்.


செயல்பாடு கண்காணிப்பு (activity tracking): 

மொபைல் போன் வைத்திருப்பவர் நடக்கிறாரா, ஓடுகிறரா அல்லது நீச்சல் அடிக்கிறாரா என்பதைக் கண்காணிக்க ஒரு டூல் தரப்படுகிறது. இதனை Activity Tracking Tool என அழைக்கலாம்.


புதிய சென்சார்கள்: 

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில், பலவகையான சென்சார்கள் உள்ளன. இவை பல்வேறு சூழ்நிலைகளை உணர்ந்து அவற்றிற்கேற்ப செயல்படுகின்றன. 

பாரோமீட்டர், ப்ராக்ஸிமிடி சென்சார், அல்டிமீட்டர், பெடோ மீட்டர், பயோ மெட்ரிக் சென்சார், இதயத் துடிப்பு, கேஸ் லீக்கேஜ், சீதோஷ்ணநிலை அளந்து கூறும் சென்சார்கள் எனப் பல உள்ளன. விண்டோஸ் இயக்கத்தில் இன்னும் பல சென்சார்கள் தரப்படுகின்றன. 

காற்றில் உள்ள ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை அறியும் சென்சார்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

நிச்சயமாக, விண்டோஸ் 10 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மொபைல் பயன்பாட்டில் ஒரு புதிய கட்டமைப்புடன் வர இருப்பதை மேலே கூறியவை காட்டுகின்றன. இன்னும் கூட நவீன தொழில் நுட்ப வசதிகள் சில, சிஸ்டம் வெளி வரும்போது கிடைக்கலாம்.